வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட ஆசைப்படுகிறது. ஆனால் தலைமைதான் முடிவு எடுக்கும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அத்துடன் 12 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரை வைகோ மேலும் கூறுகையில், திமுக கூட்டணியில் 8 ஆண்டுகளாக இருக்கிறோம். மதவாதத்தை எதிர்க்கக் கூடிய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்த நோக்கத்திற்கான அவசியம் இன்றைக்கும் இருக்கிறது.
அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எல்லா நேரங்களிலும் திமுக எடுக்கும் முடிவுகளுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அதை வைத்துக் கொண்டு கூட்டணியில் பிளவு, கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என சொல்ல முடியாது. தமிழகத்தை பொருத்தவரை இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கிறார்கள் என்றால் அது அவர்களது உரிமை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது போல்தான் மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும். 12 தொகுதிகளில் நின்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என விரும்புகிறார்கள். ஆனால் ஒரு முதன்மை செயலாளராக இத்தனை தொகுதிகள் வேண்டும் என நான் சொல்வது முதிர்ச்சியானதாக இருக்காது. சீட் இது தொடர்பாக இயக்கத்தின் தலைமைதான் முடிவெடுக்கும்.
திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. தேர்தல் காலகட்டத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் திமுக தலைமைக்கும் சீட் ஒதுக்குவதில் நெருக்கடி இருக்கும். அதே வேளையில் மதவாதத்தை எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ள எங்களது பொது நோக்கத்திற்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்பதால் ஒரு சமரச நிலை எட்டப்படும். இவ்வாறு துரை வைகோ கூறினார்.
