ரயில் நிலையங்களில் இந்தி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது: ஆ.ராசா!

ஊட்டி ரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன என்றும், உடனடியாக அவற்றை அகற்ற அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக எம்.பி ஆ.ராசா.

பழமை வாய்ந்த ஊட்டி ரயில் நிலையத்தில், பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகா சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா எழுதியதாக தவறான பதாகை வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ‘இந்தியைப் பற்றிச் சிறு பேச்சு அறிவு மூலமாக இந்தி பேசத் தெரியாத மக்கள் நிறையக் காரியங்களைச் சாதிக்கின்றனர்’ போன்ற வாசகங்களையும் அமைத்திருந்தனர்.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் நீலகிரி எம்.பி ஆ.ராசா.

இந்திய ரயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட உதகமண்டலம் ரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன.
உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.