பள்ளி மாணவர்களுக்கு சாதி, மத அடையாளம் தேவையில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்!

மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான பாஜகவினர் மதுரையில் கூடினர். இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, அவரின் மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர் முன்பாகவே திராவிடத் தலைவர்களான பெரியார், அண்ணா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அப்போது அரங்கிலேயே அமைதியாக இருந்த அதிமுக தலைவர்கள், கடந்த 2 நாட்களாக விளக்கம் அளித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

இதனிடையே மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை பேசிய பேச்சு விமர்சனத்தை பெற்று வருகிறது. அண்ணாமலை பேசுகையில், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்று கொண்டு, மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும். ஆளும் ஆட்சியாளர்களுக்கு முருகன் மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோயில் வழிபாடுகளில் தலையிட்டால் ஒவ்வொரு வீடுகளிலும் சூரசம்காரம் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது திருநீர் மற்றும் ருத்ராசம் அணிய வேண்டும் என்ற பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளத்தில் சமத்துவ சிந்தனையையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் சுமந்து செல்ல வேண்டும். அதுவே அறிவின் அடையாளம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழ் சமூகத்தின் சிறந்த அடையாளத்தை தவிர வேறு எந்த சாதி, மத அடையாளங்களும் மாணவர்களுக்கு தேவையில்லை. மத, சாதி அடையாளம் தேவையில்லை மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.