இந்து பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன: அர்ஜுன் சம்பத்!

தற்போது தமிழகத்தில் பள்ளி சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இந்து பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏழை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பள்ளிகளே தஞ்சம் கொடுப்பதாக கூறியிருக்கிறார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

கட்டண கொள்ளையில் இந்து பள்ளிகள்/கல்லூரிகள். தங்கள் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்திற்கு பலரும் அடியேனை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், மிகப்பல இந்துப் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதுதான். மறுபக்கம் அரசு உதவி இல்லாத பல கிறிஸ்தவ பள்ளிகள் கூட குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கின்றன. பல இந்து பிரபல மடங்களை சேர்ந்த பள்ளிகளில் ‘தகுதி அடிப்படையில்தான் சேர்க்கை’ என்று பீற்றிக் கொண்டு கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். கேட்டால் இவர்கள் மதங்களை கடந்தவர்களாம். அதாவது பணம் மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கோவையில் கேரள மடத்தை பின்னணியாக கொண்ட ‘விஷ்வ வித்யாலயாவில்’ உங்கள் பிள்ளைகளை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைக்க, குறைந்தது இருபது-இருபத்தைந்து லட்சம் வேண்டும். ஆனால் வாய்க்கு வாய் ஆன்மீகத்தை குறித்து பீற்றுவார்கள். கேட்டால் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்பு என்பார்கள். சராசரி இந்து பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கட்டண கொள்ளை அடித்து அப்படி என்ன நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள்? மறுபக்கம் கிறிஸ்தவ பள்ளிகளில் அந்தந்த பகுதி ‘சர்ச்’ ‘ஃபாதரிடம் ஒரு கடிதம் வாங்கி சென்றாலே இடம் கிடைத்துவிடும். இன்று நம் சராசரி இந்து பிள்ளைகளுக்கு, இந்து பள்ளிக்கூடங்களில் குறைந்த கட்டணத்தில் பள்ளிக்கூடங்கள் மிக அரிது. இறுதியாக அவர்களுக்கு தஞ்சம் கொடுப்பது கிறிஸ்தவ பள்ளிகளே.

உடனே நம்மவர்கள் பலர், அவர்களுக்கு அரசாங்க சலுகை உள்ளது, உள்கட்டமைப்பு உள்ளது என்பார்கள். ஆனால் இந்து பள்ளிகளை நடத்துபவர்களுக்கு இருக்கும் பேராசையை, அவர்கள் செயல்படுத்தும் கல்வி வியாபாரத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பல கிறிஸ்தவ பள்ளிகளோ சேவை மனப்பான்மையை அடித்தளமாக கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. ராம கிருஷ்ணா மடம், சங்கரா மடம் மற்றும் வேறு சில இந்து மடங்கள் மட்டுமே குறைந்த கட்டணத்தில் கல்வியை போதிக்கின்றன. சனாதன இந்து தர்மத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும் என்றால், இந்து பள்ளிகள், கல்லூரிகள் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் மதமாற்றம், மதமாற்றம் என உருட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.