ரோடு ஷோ மூலம் மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் ரியல் ஷோவை வரவேற்க மக்கள் தயாராகி விட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது:-
பேறிஞர் அறிஞர் அண்ணா கொட்டும் மழையில் குடும்ப பாசத்தை விதையாக வைத்து, தலைவர் தொண்டர் உறவை அண்ணா, தம்பி என்று உறவாக திராவிட இயக்கத்தை வளர்த்து சாமானியர்கள் சட்டமன்றம் செல்லலாம் என்கிற ஜனநாயகத்தை உருவாக்கினார். இன்றைக்கு 75 ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருக்கிற இந்த நிலையிலே கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்று முதலமைச்சர் பதவியையும், அரசு நிர்வாகத்தையும் இவர்களின் குடும்பத்தின் குலத்தொழிலாக சொந்தம் கொண்டாட நினைப்பதால் தமிழ்நாட்டின் ஜனநாயக சம உரிமை எங்கே போய்க் கொண்டிருக்கிறது, என்று அச்சத்திலே உறைந்து போயிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்கிற ஜனநாயக கொள்கை கோட்பாட்டிற்கு எதிராக ஏற்பட்டிருக்கும் இந்த பேராபத்தைக் கண்டு, தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்திலே திராவிட முன்னேற்ற கழக அரசை அகற்றுவோம் என்று இன்றைக்கு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஒரு தீர்வு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி மலர வேண்டும். போராடி சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் ஜனநாயகம் நம்மை ஆள வேண்டும். ஜனநாயகம் நம்மை வழிநடத்த வேண்டும், ஜனநாயகம் நம்மை பாதுகாக்க வேண்டும், மன்னராட்சி ஒழிந்து எத்தனை ஆண்டுகள் நாம் கடந்து வந்து விட்டோம். ஆனால் இப்போது மன்னர் ஆட்சி நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை தமிழ்நாட்டு மக்களே நீங்கள் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு விளம்பர வெளிச்சத்தில் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு நம்மை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு நாம் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மு.க.ஸ்டாலின் வாரிசுகளின் வளர்ச்சிக்காகவா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவா? இன்றைக்கு வரலாறு காணாத வகையிலே மக்கள் துன்பங்களிலே, துயரங்களிலே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மாய உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இன்றைக்கு ஸ்டாலின் அக்கறையெல்லாம் கவலை படாமல் அதிமுக மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். ஆட்சி அதிகாரத்தை வைத்து மக்களுக்கு திட்டங்கள் கடமைகள் எதுவும் செய்யவில்லை பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாஸ்திரம் போல ஸ்டாலின் ஆட்சி உள்ளது. வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது, வரலாறு காணாத வகையில் கடன் சுமை உயர்ந்து கொண்டே போகிறது, விவசாயிகள் வீதிகளில் தங்கள் விளைந்த நெல்மணிகளை கொட்டி வைத்து விட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, குடிநீர் உயர்வு, இதை தடுத்து நிறுத்துவதற்கு குறைப்பதற்கு ஸ்டாலினுக்கு நேரமில்லை, மனம் இல்லை. மக்களை பற்றி ஸ்டாலினுக்கு எந்த கவலையும் கிடையாது. இன்றைக்கு நீங்கள் எந்த ஷோ காட்டினாலும் மக்கள் மயங்கமாட்டார்கள். ரோடு ஷோ என்ற பெயரில் மேஜிக் ஷோ நடத்தும் மக்கள் இனி உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரியல் ஷோ நடத்தும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் வரவேற்க தயாராகி விட்டனர். இந்த அலங்கோல ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டார்கள் விவசாயிகள், தாய்மார்கள் வடிக்கும் கண்ணீர் உங்களை சுட்டெரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
