திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார்.
பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் வைத்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
ராமதாஸை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் அரசியல் பேசவில்லை. கூட்டணி குறித்தும் ஆலோசிக்கவில்லை. தமிழகத்திற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார். திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். பாமகவுக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பாஜகதான் காரணம். திமுக காரணம் என அன்புமணி புரிதலின்றி பேசுகிறார். கூட்டணி வைக்கும் கட்சிகளை ஸ்வாஹா செய்யும் வழக்கம் பாஜகவுக்கு உள்ளது. பாஜகவை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுகவை அன்புமணி விமர்சிக்கிறார். அண்ணா குறித்து வீடியோ வெளியிட்ட பாஜகவை இதுவரை அதிமுக விமர்சிக்காதது ஏன்? இதே எங்கள் கட்சித் தலைவர் குறித்து பேசியிருந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறியிருந்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
