திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்தது குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?

தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.