முன்னாள் முதல்வர் கருணாநிதியை தமிழ்க்கடவுள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தன்னலவாதிகள் பெருகியதால் தமிழினம் அவமானப்பட்டு நிற்பதாக கூறிய சீமான், கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், தமிழ்க் கடவுள் என்று சொன்னால், முன்னாள் முதல்வர் கருணாநிதியை தவிர வேறு யாரையும் சிந்தித்து பார்ப்பதில்லை. தமிழால், தமிழினத்திற்காக தமிழகத்தை 5 முறை ஆண்டவர் அல்லவா நமது தமிழ் ஆண்டவர். அதற்கு காரணம், கருணாநிதியின் உழைப்பு. உழைப்புக்கான உரிய அங்கீகாரத்தை தருவது நமது தமிழினம். அதேபோல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான அரணாக, ஆண்டவனாக விளங்கக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின். அதனால் உழைப்பிற்கு அங்கீகாரம் என்று சொன்னேனே.. அந்த அங்கீகாரத்தை யாரிடம் இருந்து பெற்றார் தெரியுமா.. கருணாநிதி வாயில் இருந்து உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.. அதற்கு பெயர்தான் ஸ்டாலின் என்ற பெயரை பெற்றவர் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷின் கருத்து தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது:-
இதனை கேட்டுட்டு யாருக்கும் கோபம் வரவில்லைல.. அப்போது இன உணர்வு, மான உணர்வு கெட்டுப்போன ஈனக் கூட்டமாக மாறிவிட்டதால், எதையும் பேச முடிகிறது. மதுரையில் கட்டிய நூலகத்திற்கு வள்ளல் பாண்டித்துரை தேவரின் பெயரை வைக்க முடியாதா? ஜல்லிக்கட்டுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்.. அந்த அரங்கிற்கு மூக்கையா தேவரின் பெயரை வைக்கக் கூடாதா? ஏன் எங்க அடையாளம் வந்துவிடும் அல்லவா.. இந்த விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் என்று பெயர் வைத்தால் தானே பிரச்சனை.. பாண்டியன் நெடுஞ்செழியன் என்று வைக்கலாமே.. யார் கேள்வி கேட்கிறார்கள் என்று பார்க்கலாம்.
கருணாநிதி தான் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவதை கேட்டுக் கொண்டு.. தன்னலவாதிகள் பெருகியதால் இந்த இனம் அவமானப்பட்டு நிற்கிறது. சுயமரியாதைக்கு இயக்கம் கண்டவர்கள் தமிழினம். மானத்திற்காக உயிரைவிட்டவர்கள் தமிழர்கள். அந்த இனத்தில் பிறந்த கூட்டம் இன்று ஒரு சீட், 2 சீட், அற்ப வாரியப் பதவி.. இதற்கு முட்டிக்கால் போட்டு நின்று கொண்டு அவமானப்படுகிறார்கள். அதனைவிடவும் கேவலம் அவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு பேசுகிறவர்கள். எல்லா அநீதிகளையும் சகித்து கொண்டு இருப்பதற்கு பெயர் தான் ஜனநாயகம்னா எப்படி..
கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி தினமாக கொண்டாட நினைக்கிறார்கள்.. செம்மொழிக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்.. எங்கு மொழி இருக்கிறது? தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கருணாநிதி வாங்கி கொடுத்ததாக சொல்கிறீர்கள்.. அதுவரை அடமானம் இருந்ததா? சிறந்தே பிறந்தமொழி தமிழ்.. நடராசன் இறந்தநாள் தான் செம்மொழி நாளாக இருக்க வேண்டும். வள்ளுவரின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்.. கீழடியை ஏன் 2 ஏக்கர் நிலத்தை மட்டும் தோண்டிவிட்டு மூடி சென்றார்கள்? தமிழர் நாகரீகம் அதனை தோண்டினால் தமிழனின் தொன்மம் தெரிந்துவிடும். அவர் வந்தால் இந்திய நாகரீகம் என்கிறான்.. நீ திராவிட நாகரீகம் என்கிறாய்.. தமிழர் நாகரீகம், தமிழர் பண்பாடு என்று சொல்வதற்கு ஏன் வலிக்கிறது.. இது எவ்வளவு பெரிய ஏமாற்று. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. அவர்கள் முடிவெடுத்து சேர்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் அது அவருக்கு பலனை தந்திருக்கும். தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது அவருக்கு தேவையற்ற சுமை. இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் இந்த அணிகளெல்லாம் இருந்திருந்தால், 15 எம்.பி.க்கள், மத்தியில் 2 மந்திரிகள் என இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தில் கணிப்பு தவறாக போய்விட்டது என்று நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
