அஜித் குமாரின் மரணம்.. அரச பயங்கரவாதம்: திருமாவளவன்!

காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த மரணம் அரச பயங்கரவாதம் என்று விமர்சித்திருக்கிறார்.

மடப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மடப்புரத்தைச் சார்ந்த தம்பி அஜித் குமார் படுகொலை ஆகி இருக்கிறார். கொடூரமான முறையிலே அவரை விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்திருக்கிறார்கள். இதற்கு மிக வன்மையான கண்டனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவிக்கிறது.

தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது. என்றாலும் இது ஆரா துயரம். காவல் நிலைய கட்டுப்பாட்டில் அல்லது காவல் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் புலன் விசாரணையில் இருப்பவர்கள் இதுபோல அடிக்கடி படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை அனைவரும் அறிவோம். முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதும் நமக்கு ஆறுதலை தருகிறது. இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்கட்டும் என்று அனுமதித்து இருப்பது, முதல்வரின் நேர்மையை உறுதிப்படுத்துகிறது.

அஜித் குமாரின் தாயாரையும் அவருடைய உடன் பிறந்த தம்பி நவீன் குமார் அவர்களையும் இப்போது நாங்கள் நேரிலே சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தோம். எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படாத ஒரு வழக்கில், காவல்துறையினர் புலன் விசாரணையே தொடங்கக்கூடாது என்பது தான் சட்டம். புலன் விசாரணை என்கிற பெயரால் கொடூரத்தை அரங்கேற்றினார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்கமாக காவல் நிலையத்தில் உள்ள சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவின் ஆய்வாளர் முதலில் இந்த புகாரை பெற்று இருக்கிறார். சிஎஸ்ஆர்ஐ தந்து இருக்கிறார். எந்த முகாந்திரமும் இல்லை என்பதனால் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். அவர் எஃப் ஐ ஆர் போடவில்லை. புகாரை பெற்றுக் கொண்டதற்கான ரசீது மட்டும்தான் தந்திருக்கிறார். அதன் பிறகு டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் எந்த அடிப்படையில் இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்கள்? இப்படிப்பட்ட கொடூரமான தாக்குதலை நடத்தி படுகொலை செய்து இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விஆர் கிருஷ்ண ஐயர் போன்றவர்கள் காவல்துறையினரை குறித்துச் சொன்ன கருத்துக்கள் இன்றைக்கும் உச்சநீதிமன்ற ஆவணங்களில் அப்படியே பதிவாகி இருக்கின்றன. ‘காவல்துறையினர் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள்’ என்று நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள். இது திருமாவளவன் சொல்லுகிற கருத்து அல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து. தேசிய அளவில் காவல்துறையினரின் அதிகார ஆணவம் என்பது அவ்வப்போது வெளிப்பட்டு இருக்கிறது. அவர்களை மனித உரிமை உணர்வு உள்ளவர்களாக விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் தரப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் ஒரு புலன் விசாரணையை காவல்துறையினர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு 11 கட்டளைகளை உச்சநீதிமன்றம் வரையறுத்து இருக்கிறது. விசாரிக்க கூடியவர்கள் யார் என்ற அடையாளத்தோடு யூனிபார்ம் அணந்திருக்க வேண்டும். அதில் விசாரணை அதிகாரியின் பெயர் இருக்க வேண்டும். என்ன வழக்குக்காக விசாரிக்கிறோம் என்கிற தகவலை சொல்லணும் போன்ற 11 கட்டளைகள் பிறப்பித்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை எந்த காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பின்பற்றுவது இல்லை. எந்த வழக்காக இருந்தாலும் புலன் விசாரணை என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும் என்கிற வரையறைகளை இவர்கள் பின்பற்றுவதே இல்லை. இந்த வழக்கை விசாரித்த ஐந்து பேருமே சீருடை அணியவில்லை. வழிப்போக்கர்களைப் போல, கூலிப்படை கும்பலை போல திடீரென வந்து தூக்கிச் சென்று இருக்கிறார்கள்.

அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரையும் கொண்டு போயிருக்கிறார்கள். பல மணி நேரம் வைத்து விசாரணை என்கிற பெயரால் அவரை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவரையும் அடித்து இருக்கிறார்கள். இது ஒரு ஸ்டேட் டெரரிசம், அரச பயங்கரவாதம். இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். முதல்வர் நவீன் குமாருக்கு அரசு பணி வழங்கப்படும் என்கிற உறுதியை அளித்திருக்கிறார். வாடகை வீட்டிலே குடியிருக்கிற கணவரை இழந்த அந்த தாய்க்கு ஆறுதல் அளிக்கிற வகையில் அரசு வீட்டு மனை பட்டா வழங்கும், வீடு கட்டி தரும் என்கிற உறுதியையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி இருப்பதாக சொன்னார்கள். அத்துடன் அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே வலியுறுத்துகிறோம்.

எத்தனை கோடிகளை கொடுத்தாலும் ஒரு உயிரை மீட்க முடியாது. ஆகவே அரசு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சி சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட அரசு அஜித்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்றும் காவல்துறையின் அமைச்சராகவும் இருக்கிற நம்முடைய முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.