என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை: பாமக எம்எல்ஏ அருள்!

பாமகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக எம்எல்ஏ அருள் பதிலடி கொடுத்துள்ளார். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தாம் எந்த தவறையும் செய்யவில்லை என்று கூறிய அருள், எந்த காலத்திலும் பாமகவை விட்டு வேறு கட்சியில் இணைய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. பாமகவில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு புதியவர்களை ராமதாஸ் நியமித்தார். ஆனால் அன்புமணி, ராமதாஸின் நியமனங்கள் செல்லாது என்று பதிலடி கொடுத்து வந்தார். இதனிடையே சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதற்கு முன்பாக திடீரென சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டார். ஆனால் ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அருள் கலந்து கொண்டார். அப்போது எம்எல்ஏ அருளுக்கு, பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதற்கு அன்புமணி தரப்பில் உத்தரவு செல்லாது என்று கூற, அருள் பதிலடி கொடுத்தார். இதனால் அன்புமணி மற்றும் அருள் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், பாமக கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார். அவர் பாமக தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைக்கிறார். இதுகுறித்து விளக்கம் கேட்டு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டதை அருள் ஏற்கவில்லை. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். எம்எல்ஏ அருளுடன் பாமகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று அன்புமணி உத்தரவிட்டுள்ளார். இது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பாமக எம்எல்ஏ அருள் கூறியதாவது:-

பாமகவில் 36 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அன்புமணியுடன் தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு கிராமத்திற்குள் பயணித்துள்ளேன். பாமக இணைந்து செயல்பட வேண்டும், ராமதாஸ் தலைமையில் செயல்படுங்கள்.. அவருக்கு பின் நீங்கள் தானே தலைவர் என்று சொல்வதை தவறு என்ற காரணத்தால் நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பாமகவின் தலைவராக செயல்படும் ராமதாஸ்-க்கு தான் நீக்குவதற்கு அதிகாரம் உள்ளது. செயல் தலைவராக உள்ள அண்ணன் அன்புமணிக்கு அதிகாரமில்லை. கட்சிப் பொறுப்பில் இருந்து யாரையும் நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. அதனால், இந்த நீக்கம் செல்லாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகவும், பாமகவின் இணை பொதுச் செயலாளராகவும் நான் தொடருவேன்.

அன்புமணியை விமர்சிக்கவே இல்லை. ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என்று சொன்ன போது மட்டுமே பதில் அளித்தேன். அப்படி சொல்லக் கூடாது என்றுதான் கூறினேன். இதே வாயால் அன்புமணி வருகிறார் என்று கத்தி இருக்கிறேன். கட்சி பிளவுபடக் கூடாது, இணைந்து செயல்படுங்கள் என்று கூறியதை தப்பு என்று நீக்குவது சரியா? என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்த தவறும் செய்யவில்லை. ராமதாஸை விட்டு வெளியேறி வந்துவிட்டால் நான் நல்லவனா? இருவரும் வாழ்க என்று சொல்ல வேண்டும். பதவிக்கு ஆசைப்பட்டு ராமதாஸை விட்டுவிட்டு, அன்புமணி பக்கம் செல்லவில்லை. ராமதாஸ்க்கு பின் அன்புமணி வேண்டும் என்று சொல்கிறேன். என்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். எந்த காலத்திலும் பாமகவில் இருந்து விலக மாட்டேன். வேறு கட்சியிலும் இணைய மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.