பொன்முடி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டி இருக்கும்: உயர் நீதிமன்றம்!

பெண்கள் மற்றும் சைவம்- வைணவம் குறித்த வெறுப்புப் பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போலீசார் விசாரணை செய்யத் தயங்கினால், அந்த வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவர் விலைமாது குறித்து சில கருத்துகளைக் கூறியிருந்தார். மேலும், சைவம்- வைணவம் குறித்தும் சில மோசமான ஒப்புமையும் அளித்திருந்தார். அவரது பேச்சு அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் பொன்முடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டனத்தைப் பதிவு செய்தனர். திமுக எம்பி கனிமொழி கூட பொன்முடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தச் சர்ச்சைக்கு பிறகே பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “முதலில் பொன்முடி பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நேரத்தில் இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. ஆனால், அதன் பிறகு பொன்முடிக்கு எதிராக மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக் கூறி, அந்தப் புகார்கள் முடித்து வைக்கப்பட்டது. மேலும், அதன் பிறகும் பொன்முடி மீது 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் இருக்கிறது. பொன்முடி 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைத் தான் குறிப்பிட்டுப் பேசினார்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மாஜி அமைச்சர் மீதான புகார்கள் மீது போலீசார், புலன் விசாரணை செய்யத் தயங்கினால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என நீதிபதி எச்சரித்தார். மேலும், பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சர் பதவியில் இருந்தவர் ஏன் இப்படிப் பேச வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். நீதிபதி மேலும், “பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராகப் பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும்?” அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்து பேச வேண்டும். கருத்துச் சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கலாம்” எனக் கூறினார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.