பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவாரோடு தமிழ்நாட்டை காப்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வாழ்த்துகள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை இந்த பயணத்தை மேற்கொள்கிறார். கோவை, கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாட உள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது.
கோவை டூ தஞ்சை முதற்கட்டமாக அதிமுக பலமாக இருக்கும் கொங்கு பகுதியில் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்கிறார். கோவையில் தொடங்கும் இந்த பயணம், ஒரு நாளுக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் வீதம், மக்களை சந்திக்க இருக்கிறார். இறுதியாக ஜூலை 21ஆம் தேதி தஞ்சையில் பயணத்தை முடிக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் பயணத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்க பாஜக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், தேர்தலையொட்டி அதிமுக இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தமிழ்நாடு காப்போம் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோருடன் சேர்ந்து எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேசத்திற்கே அவர்களால் ஆபத்து என்று மக்கள் அணிதிரண்டு வரும் போது, தமிழ்நாட்டை காக்க புறப்படுகிற அதிமுகவின் தலைவர் சங்கபரிவாரோடு செல்வது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
