சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில், திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி ஒருபோதும் கிடையாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். கடந்த சில வாரங்களாகவே விஜய்-க்கு அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடம் இருந்து கூட்டணிக்கான அழைப்பு வந்து கொடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. அதனை முற்றிலுமாக விஜய் நிராகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜயின் இந்த அறிவிப்பு காரணமாக சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படலாம். திமுக கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக – பாஜக கூட்டணி ஒரு அணியாககவும், நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித் தனி அணிகளாகவும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கனிமொழி கலந்துக்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மக்கள் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலாக இருக்காது. அதிமுக, தவெக இடையே சவாலாக இருக்கலாம். நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். அது அவர்கள் தனிப்பட்ட முடிவு. தனித்துப் போட்டியிடுவோம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்திருப்பதற்கு வாழ்த்துகள். ஆனால் வெற்றி நிச்சயமாக திமுக கூட்டணிக்கு தான் என்பது மக்களின் வரவேற்பை பார்க்கும் போது தெரிகிறது என்று கூறினார்.
திமுக கூட்டணியில் வேறு சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் யார் யாரை சேர்ப்பது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார். முதலமைச்சரை ஏற்றுக்கொண்டு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் இணைந்து பணியாற்றலாம் என்றார்.
தொடர்ந்து அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற எடப்பாடி பழனிசாமி பேச்சு குறித்த கேள்விக்கு, அதிமுகவின் பக்கத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதிமுகவை யாரும் கபளிகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பார். பாஜக உடன் கூட்டணி கிடையாது என தவெக தலைவர் விஜய் தெளிவுபடுத்தியது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுடைய எதிரிகள் யார் என்பதில் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
