சுற்றுப்பயணம் குறித்த லோகோ, கட்சிப் பாடலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில், அதிமுக தலைமையிலான அணியில் பாஜக இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

முதல்கட்டமாக ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்க இருக்கிறார். அதோடு அவர் 23-ம் தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் தொடர்பான லோகோ மற்றும் பாடலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இது குறித்த வீடியோவை அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல், லோகோவை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர். அதிமுகவை தொடங்கினார், ஜெயலலிதாவும் அந்த வழியில் செயல்பட்டு தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தது கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி. அதனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.

இப்போது நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் விதமாகவே எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளேன்.

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அதற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக இந்த சுற்றுப்பயணம் அமையும். இந்த சுற்றுப்பயணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் ஒரே நோக்கம். திமுக இப்போது வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு பரிதாபகரமாக உள்ளது.

எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையவுள்ளன. அப்போது மேலும் பலம் வாய்ந்த கூட்டணியாக எங்கள் கூட்டணி அமையும். கூட்டணி குறித்து விஜய் எடுத்துள்ள முடிவு அவரின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான், அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு உள்ள கட்சிகள் எங்களோடு இணையலாம். திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித்ஷா ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார். இதில் மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்ப தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.