ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது மறைந்து கொண்டிருக்கும் உண்மை குற்றவாளிகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் ஆகியோர் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அமைக்கப்பட்ட 9 அடி சிலை திறக்கப்பட்டது. பின்னர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார். இதன்பின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.
இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் நிறைய கேள்விகள் உள்ளது. இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பது தெரியவில்லை. விசாரணைக்குட்பட்டு சில குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள். ஆனால் பின்னால் இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது. இதனால் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்ற உண்மைத்தன்மையை ஆராய வேண்டி இருக்கிறது. வழக்கு மன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுவுடன் சேர்த்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர்கள் சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை.
குற்றவாளிகளுக்கு பின் பெரிய சூழ்ச்சி இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் விசாரணையில் அனைத்து விவகாரங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பாக கூட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதுவெறும் முன்விரோத கொலையாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த சம்பவத்திற்கு பின்னுள்ள உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அம்பை எய்தது யார்? மறைமுகமாக இருக்கும் குற்றவாளிகளை வெளியில் கொண்டு வர வேண்டும். அதனை பொற்கொடி நிச்சயம் வெளியில் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அம்பேத்கரின் சட்டப்பாதையில் பயணித்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
