செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுபோக வேண்டும்: சத்யராஜ்!

இலங்கையின் செம்மணியில் இருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து யாழ்ப்பாணம் 1995 ஆம் ஆண்டுவாக்கில் மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுபவர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. செம்மணி பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அகழாய்வின் போது அந்த பகுதியில் மனிதப் புதைகுழி இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதில் இருந்து ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கையின் செம்மணி – சித்துபாத்தி பகுதியில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 44 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தகப் பையுடன் அடையாளம் காணப்பட்ட குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிய காலணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றிப் பேசியுள்ள நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-

செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரதும் ஆணித்தரமான கருத்து. ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. அங்கு தாயுடன் பிள்ளைகள் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பள்ளி செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கிறான். இவை அனைத்தும் மிகவும் மோசமான மனிதாபிமானம் அற்ற செயலாகவே உள்ளது.

இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது. இதனை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும். இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான நீதி கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.