வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு!

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்து வந்த நிலையில் நடப்பு ஆண்டில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வருவதால் இந்த கோவில் குடமுழுக்கு விழாவில் அந்த தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை குடமுழுக்கு நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆனால் அதற்கு சிறிது நேரத்துக்கும் முன்பு தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குடமுழுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், மூலவர் விமானத்தில் நன்னீராட்டு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பகுதிக்கு செல்ல தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கியிருந்த அறநிலையத்துறை அதிகாரிகள், அதற்கு பிறகு வந்த செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கவில்லை. அங்கு நிற்பதற்கு மேலே இடமில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கிவிட்டு, செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்காததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சிறிந்து நேரம் கழித்து, செல்வப்பெருந்தகைக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தமிழிசையை அனுமதித்த அதிகாரிகள், ஏன் செல்வப்பெருந்தகைக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை என்றும், சாதி ரீதியான பாகுபாடுகள் தான் இதற்கு காரணமா என சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, 2,000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்துள்ளதாகவும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன். முதலில் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க சென்ற போது என்னை அறநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பிறகு தான் என்னை வழிபட அனுமதித்தனர். இது பகிரங்கமான பாகுபாடு. இந்த அணுகுமுறை முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. இந்த சம்பவம் என்னை மனதளவில் பாதித்தது என்று கூறினார்.