வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.!

செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறுகையில், 2 ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்துவிடமுடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன் என்றார்.

இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார்? என்பதை அறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ‘வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.