கேட் கீப்பரை பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்!

கடலூரில் கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது தொடர் வண்டி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற தொடர் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த கோர விபத்தில், 11 ஆம் வகுப்பு மாணவி சாருமதி, மாணவர் செழியன், நிமிலேஷ் ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கின்ற செய்தி பெரும் பதற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. மேலும், பள்ளி வாகன ஓட்டுனர் மற்றும் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்திருப்பது கவலை அளிக்கிறது.

இந்த விபத்திற்கு, செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததும், கேட் கீப்பர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதுமே காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் மெத்தனப்போக்குடன் செயல்பட்ட கேட் கீப்பரை பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். அதோடு, தமிழ்நாடு முழுவதும் ரயில்வே கேட் இருக்கும் பகுதிகளில், அங்கு நியமிக்கப்பட்டிருக்கும் கேட் கீப்பர்களை முறையாக செயல்பட தொடர் வண்டி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரயில்வே கேட்டுகளில் வட மாநிலத்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மொழி பிரச்சனையின் காரணமாக, சரிவர பணி செய்ய முடியாமல், மது அருந்திவிட்டு தூங்கி விடுகிறார்கள். இதனால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களையே பணி நியமன செய்ய வேண்டும். குறிப்பாக ரயில்வே துறையில் 95 விழுக்காடு வட மாநிலத்தவர்களே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பணியிடங்களில் தமிழர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர், உறவினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆறுதலைக் கூறிக்கொள்கிறேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் ஓட்டுனருக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் விரைந்து செயல்பட வேண்டும். அவர்கள் பூரண உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இயற்கை பேராற்றலை வேண்டுகிறேன்.

குறிப்பாக, விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு கொடுத்து உதவ வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.