தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது: செல்வப்பெருந்தகை!

பாஜகவின் வெறுப்பு அரசியலால், தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது:-

கடந்த 2014 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2 கட்ட அகழாய்வுகளை கீழடியில் நடத்தி 982 பக்க கீழடி அகழாய்வு அறிக்கையை சமர்பித்தார். கீழடி நாகரிகம் குறித்த ஆய்வறிக்கையை திருத்தி சொல்லி ஒன்றிய அரசு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை வலியுறுத்தியது. அதற்கு அவர் தான் கொடுத்த தரவுகள் சரியாகவும், அறிவியல்பூர்வமாக நீருபிக்கப்பட்டுள்ளது என்று கூறி திருத்தம் செய்யவில்லை; அதனால், இன்றுவரை அங்கீகரிக்க ஒன்றிய அரசு கீழடி ஆய்வறிக்கை ஏற்க மறுத்து வருகிறது.

ஒன்றிய அரசின் தொல்லியல்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாட்டில் தொடர் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கீழடியில் 3ம் கட்ட ஆய்வு நடத்திய தொல்லியல் ஆய்வாளர் P.S.ஸ்ரீராமன் என்பவர், அங்கு ஒன்றுமே இல்லை என்று தெரிவித்ததால் கீழடியில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறை ஆய்வை முடித்துக் கொண்டது. அதன்பின் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது ஒன்றிய அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கீழடி 3ம் கட்ட அகழ்வராய்ச்சியில் ‘அங்கு ஒன்றுமே இல்லை’ என்று கூறிய ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குநர் P.S.ஸ்ரீராமனிடம் அறிக்கை தயாரிக்க கேட்டிருப்பது உள்நோக்கம் கொண்ட செயலாகவுள்ளது. மேலும், இந்திய தொல்லியல்துறை கீழடி விவகாரத்தில் தமிழர்களின் நாகரீகத்தையும், தொன்மையையும் மறைக்கும் விதமாக தான் விரும்பும் ஆய்வறிக்கையை P.S.ஸ்ரீராமனிடம் கேட்டுப் பெறப்போகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசு முற்றிலும் நிராகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகப் பார்க்கின்றேன். எந்தவிதத்திலும், பாஜகவின் வெறுப்பு அரசியலால், தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.