அதிமுகவை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார் அமித்ஷா: திருமாவளவன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவை கிள்ளு கீரையாக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கருத்தையே அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக – பாஜக பொருந்தா கூட்டணி என்பதை தொடக்கம் முதலே சொல்லி வருகிறேன். அவர்கள் கொள்கை அளவில் மட்டுமல்லாமல் செயல் அளவிலும் கூட இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அளவிற்கு இடைவெளி இருக்கிறது.

வெளியில் இருக்கும் சில கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கு அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார். அதிமுக தமிழ்நாட்டில் வலுவான கட்சி. ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த கட்சியின் விருப்பத்திற்கு மாறாக, அமித்ஷா தன் விருப்பத்தில் பேசி வருகிறார். அதிமுக மூத்த தலைவர்கள் ஒன்று கூடி அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஆட்சி என்று அறிவிக்கவில்லை.

அதிமுக கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் மட்டுமே, அது அதிகாரப்பூர்வமானது. அமித்ஷாவாக சொல்லி கொண்டிருக்கும் வரையில், அதிமுகவை அவர் ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார் என்றே உணர முடியும். திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய வேண்டும் என்பது எல்.முருகனின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தவெக சார்பாக அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துவது அவசியமானது. ஆனால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், பாதிக்கப்பட்டோருக்கு எந்த பயனும் தராது என்று தெரிவித்துள்ளார்.