’ஸ்டாலின் அரசு பகிரங்கமாக கனிம வளத்தைக் கொள்ளையடிக்கிறது’’ என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். 2400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 150 பேர் அமரக்கூடிய அரங்கும், மாநகர மாவட்ட கழக செயலாளர் தனி அறையும், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிரொலி ஏற்படாமல் இருப்பதற்காக அரங்கு சுவர் முழுவதும் எதிரொலி தடுப்பு வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன் இந்த கட்டிடம் முழுவதும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.
சேலம், கிருஷ்ணா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ள அதிமுக மாநகர் மாவட்ட கழக புதிய அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் ஒற்றுமையாக வலிமையாக தேர்தலை சந்திக்கிறது. சேலம் மாநகராட்சி குறைபாடுகளை அதிமுக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது திமுக பெண்ணுறுப்பினர் எழுந்து வந்து தாக்கியுள்ளார். இந்த அராஜகத்தை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். காவல் துறையில் புகார் அளித்தால் அடிபட்டு வருபவர் மீது வழக்கு பதிவு செய்கிறது தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவெடுத்து விட்டனர். சுற்றுப்பயணத்தில் மக்களின் எழுச்சி மூலம் காண முடிகிறது
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வேடிக்கையானது. அதில் ஏராளமான குறைகளை குறிப்பிட்டுள்ளனர் அப்படி என்றால் இவ்வளவு காலமாக அது நிறைவேற்றவில்லை என்பதுதான் அர்த்தம். அதில் மக்களின் செல்போன் எண்ணை குறிப்பிட சொல்கிறார்கள். அதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் தங்களது ஆதாயத்திற்கு பயன்படுத்தப் போகிறார்கள். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெட்டி வைத்து மனு வாங்கினார்கள் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. அரசு அதிகாரிகளை கொண்டு மக்களின் தொலைபேசி எண்ணை வாங்குவது அதைக் கொண்டு தந்திரமாக மக்களிடம் உரையாடுவதற்கு பயன்படுத்த போகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக அமையும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது இன்னும் பல கட்சிகள் கூட்டணி இணைய வாய்ப்புள்ளது. கனிமக் கொள்ளைகள் குறித்து அதிமுக சட்டமன்றத்தில் பேசி உள்ளது. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. அரசு அதில் கவனம் செலுத்தவில்லை அரசு பகிரங்கமாக கொள்ளையடிப்பதை செய்து வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் எந்தெந்த துறையில் ஊழல் நடந்துள்ளது என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
