“சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால் நம்முடைய வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள்” என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா அமைப்பினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய ‛வள்ளுவர் மறை, வைரமுத்து உரை’ எனும் நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நூலை நூலாசிரியர் வைரமுத்து முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பெற்று கொண்டார். இந்நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்கிற தேவை இன்றைக்கும் இருக்கிறது. காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க முயற்சி முயற்சியில் நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் வகையில் மாபெரும் அமைப்பை நாம் தலைநகர் டெல்லியில் உருவாக்கியாக வேண்டும். வள்ளுவர் மறையின் பொருளை இந்திய சமூத்தில் விதைக்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
வள்ளுவர் தலைவர் மட்டுமல்ல, புரட்சியாளரும் கூட. அவர் வழங்கியிருக்கும் களஞ்சியத்தின் புகழை பரப்ப வேண்டியது கடமை மட்டுமல்ல. காலத்தின் தேவையும் கூட. வள்ளுவத்தை பரப்புவதோடு, வள்ளுவர் மீது பூச முயற்சிக்கப்படும் களங்கத்தை தமிழ் சமூகம் முழுமையாக எதிர்க்க வேண்டும். சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தினால், நம்முடைய வள்ளுவரை காவியடித்து திருட பார்க்கிறார்கள். திருட என்பதை விட, ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதே உண்மை. அதுதான் பொருத்தமாக இருக்கும். திருவள்ளுவர் என்பவர், ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’ என்று சொன்ன பகுத்தறிவு கவி. ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று சுயமரியாதை கவியாக விளங்கினார். அனைவரும் சமம் என்கிற சமூக நீதி கவி அவர். உலக மக்களுக்கு ஒளி வழங்குகிற திருக்குறளை படைக்க திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால் அவருடைய கருத்துக்களின் வெப்பமே அவர்களை பொசுக்கி விடும். இவ்வாறு அவர் பேசினார்.
