பா.ஜ.க.வின் கே.பி.ராமலிங்கம் எனக்கு நண்பர்தான்: திருமாவளவன்!

பா.ஜ.க.வின் கே.பி.ராமலிங்கம் எனக்கு நண்பர்தான்; அந்த நட்பின் அடிப்படையில் என்னைச் சந்திக்க எப்போது வந்தாலும் நான் சந்திக்கத் தயார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கே.பி.ராமலிங்கம் எனக்கு நன்கு அறிமுகமானவர். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்தபோது நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளேன். அந்த நட்பின் அடிப்படையில் அவர் சந்திக்க வந்தால் நிச்சயமாக வரவேற்போம். பா.ஜ.க.வில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நட்பு வேறு, உள்வாங்கிய கொள்கை வேறு. பா.ஜ.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணையாது. பா.ஜ.க.விற்கு அவர்களது கொள்கை எத்தனை முக்கியமோ, அதுபோல் எங்கள் கொள்கை எங்களுக்கு முக்கியம். பா.ஜ.க.வின் கொள்கைகள் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு நேர் முரணானது. இந்துத்துவம் வேறு, அம்பேத்கரியம் வேறு. எங்களுக்கு எங்கள் கொள்கையே உயிர் மூச்சு.

தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.க.வை எதிர்ப்பதில்லை. கூட்டணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் பா.ஜ.க.வை எதிர்ப்போம். அதற்குத் தனிப்பட்ட தேர்தல் அரசியல் காரணம் கிடையாது. மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு நேர் எதிரான கட்சி பா.ஜ.க. அ.தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நான் விமர்சிக்கவில்லை. அ.தி.மு.க. மீது எனக்கு எந்த காழ்ப்பும் இல்லை. அ.தி.மு.க. வலுவாக இருக்கும்போதே, கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொல்கிறார் என்றால், அ.தி.மு.க.வை அவர்கள் எந்த அளவிற்குப் பலவீனமாகக் கருதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைப் பற்றிப் பேசியதற்கு என்னை விமர்சிக்கிறார்கள். அதுதான் அ.தி.மு.க.வின் அணுகுமுறையாகவும் இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக, நாமக்கல் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணியை, பா.ஜ.க. சேலம் மண்டல பெருங்கோட்டப் பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பர். அவரைத் திருத்த உள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அவரைச் சந்தித்து நல்ல பலனைத் தரவுள்ளேன். தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் இருந்தால் தலித் மக்கள் பாதிக்கப்படுவர். ஒன்று அல்லது இரண்டு சீட்டுகளுக்காக வி.சி.க. இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழிநடத்திவிடக் கூடாது. தி.மு.க.வுடன் சேர்ந்து தலித் மக்களுக்குத் துரோகம் செய்கிறார். அந்த அணியில் இருந்து எங்கள் அணியில் இழுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

தேர்தலுக்கு எத்தனை மாதங்கள் தமிழக சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகளை எப்படியாவது இழுத்து வருவது எனப் பா.ஜ.க.வும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வை எப்படியாவது வெளியேற்ற வைப்பது என தி.மு.க.வும் முயற்சித்து வருகின்றன. ஆனால், திருமாவளவனோ, பா.ஜ.க.வுடனோ அல்லது பா.ஜ.க. இருக்கும் கூட்டணிக்கோ வி.சி.க. வராது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.