மதிமுகவுக்கும், வைகோவுக்கும், துரை வைகோதான் எதிரியாக வருவார் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ – துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையே கருத்து யுத்தம் நடந்து வரும் சூழலில் மல்லை சத்யா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் தற்போது புயல் வீசிக் கொண்டிருக்கிறது. வைகோவுக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த மல்லை சத்யா மீது வைகோவே அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை அடுக்கியதைத் தொடர்ந்து, மல்லை சத்யா, மதிமுகவில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார். மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுடன் மல்லை சத்யா தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். என்னை பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடன் மல்லை சத்யா மிக நெருக்கமாக பழகி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து மல்லை சத்யா திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்தார் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
வைகோவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அதில், மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார் எனக் கூறினார். தொடர்ந்து, மதிமுக விவகாரம் அனலைக் கிளப்பி வருகிறது. மல்லை சத்யா, திமுகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன. வைகோ பற்றியும், துரை வைகோ பற்றியும் பொது வெளியில் பேசி வருகிறார் மல்லை சத்யா. அதேசமயம், மதிமுகவில் மல்லை சத்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள மல்லை சத்யா கூறியுள்ளதாவது:-
கட்சியின் தலைவர் வைகோ. அவரது மகனுக்கு வாய்ப்பு கொடுப்பதை, யாராவது எதிர்த்தால் அந்த கட்சியில் இருக்க முடியுமா? எனவே, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். மாற்றுக் கருத்து இருந்தாலும், சொல்ல முடியாமல் சிலர் உள்ளே இருக்கிறார்கள். துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும். அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் கூட பேச முடியும். கடந்த மே மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஜூலியஸ் சீசர் – புரூட்டஸ், ஏசு கிறிஸ்து – யூதாஸ், வீரபாண்டிய கட்டபொம்மன் – எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார். துரை வைகோ அரசியல் பாலபாடம் கூட படித்ததில்லை. அரசியலில் அவர் ஒரு எல்கேஜி. அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் அனைத்தும், ஒரே ரத்தத்தில் வந்தவர்கள் என்பதை உணரவில்லை. ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும். எனவே, மதிமுகவை கட்டி எழுப்பிய வைகோவுக்கு, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த நீங்கள் தான் துரோகியாக இருப்பீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கும் கூட்டமல்ல. களத்தில் படைத் தளபதியாக நின்று மாண்டு போகிறவர்கள். எனவே, மதிமுகவுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
