ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க இருக்கும் அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் நோக்கம் என மாவட்ட செயலாளர்களுடனான உரையாடலின் போது மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களையும், களப்பணிகளையும் இப்போதிருந்தே தொடங்கியுள்ளன. அதன்படி, சட்டப்பேரவை எதிர்கட்சியான அதிமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து ஆளும் கட்சியான திமுக, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகும் விதமாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்தித்துள்ளார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாட்டோட மண் – மொழி மற்றும் மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3ஆம் தேதி தொடங்கினோம்.
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம்; நன்றி!
நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கு. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை, ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க இருக்கும் அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
நாம் உருவாக்கி இருக்கின்ற பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கும், தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ உறவென விருந்தோம்பல் வழங்கி, ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்!
“எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
