“கடந்த வாரம் கம்யூனிஸ்டுகளை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த வாரம் கூட்டணிக்கு அழைப்பது நகைச்சுவை. 2025 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தான்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது என்று விமர்சனம் செய்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதே எடப்பாடி பழனிசாமி நேற்று சிதம்பரத்தில் பேசும்போது, கூட்டணியில் உள்ள விசிக மற்றும் கம்யூனிஸ்ட் மாநாடுகளுக்கே திமுக அரசு அனுமதி அளிப்பது இல்லை. அசிங்கப்பட்டு கூட்டணியில் இருக்க வேண்டுமா? அதிமுக கூட்டணியில் சேருபவர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நகைச்சுவையாக பேசி வருகிறார். கடந்த வாரம் கம்யூனிஸ்டுகளை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த வாரம் கூட்டணிக்கு அழைப்பது நகைச்சுவை. 2025ம் ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தான். இபிஎஸ் ஏற்கனவே சேர்ந்திருக்கும் பாஜக, ரத்தினக் கம்பளம் அல்ல. ரத்தம் படிந்த கம்பளம். அதன் ஆபத்தை உணர்ந்தும் தனக்கு இருக்கும் நெருக்கடியால் அதில் பயணிக்கிறார்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து அநீதியை பாஜக இழைத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை பாஜக அமல்படுத்தியதில் எடப்பாடியின் நிலைப்பாடு என்ன? 3ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு நடத்தும் தேசிய கல்விக் கொள்கையை எடப்பாடி ஆதரிக்கிறாரா? ஒன்றிய அரசின் கல்வி கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். மோடி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு குறைக்கப்படுகிறது. பாஜக அரசின் உதய் மின் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார். ஜெயலலிதா மறைவுக்குபின் எடப்பாடி ஆட்சியில் உதய்மின் திட்டத்தை அனுமதித்தனர். உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் தான் தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டது.
இலங்கை கடற்படை தாக்குதலால் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தமிழ்நாடு மீனவர்களின் பாதிப்பு குறித்து தனது நிலைப்பாட்டை எடப்பாடி சொல்ல வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் அழித்துவிடும் என கூட்டணியில் இருந்து விலகினார் ஜெயலலிதா. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகி ஆட்சியை கவிழ்த்தார் ஜெயலலிதா. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் பாஜக பங்கு பெறுவோம் என அமித் ஷா கூறுகிறார்.
கடந்த வாரம் கம்யூனிஸ்டுகளை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த வாரம் கூட்டணிக்கு அழைப்பது நகைச்சுவை. 2025 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தான். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சும் அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சும் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் ஒன்று பேசிவிட்டு, அதற்கு நேர்மாறாக இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். கடந்த வாரம் கம்யூனிஸ்ட்களையே காணவில்லை என்று சொன்னார். இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் என்ற புதைகுழிக்குள் விழுந்துவிட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளது அதிமுக தான்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
