அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கடலூரை சேர்ந்த சத்யா பன்னீர் செல்வம் மாநில அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்தார். இவருடைய கணவர் பன்னீர் செல்வம், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சத்யா, அதிமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் சத்யாவும் அவருடைய கணவர் பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்திற்கு மனு அளித்தனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சத்யா, பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்த்து உத்தரவிட்டார். அப்போதுதான் சத்யாவுக்கு அதிமுக மகளிர் அணி துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பண்ருட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சத்யா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏவான சத்யா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர் மீது புதிய வழக்கை பதிவு செய்தனர். இந்த நிலையில் கடலூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று காலை 6.30 மணிக்கு சத்யாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தகவல் அறிந்ததும் சத்யா வீட்டின் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சத்யா கணவர் பன்னீர் செல்வம் மீது ஏற்கெனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போதும் சத்யா வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.