2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விவரங்களை மறைத்தது, போலியான பான் எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி களம் கண்டார். அப்போது கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களைக் குறைத்து, தவறான தகவல்களை அளித்ததாக, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்களிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
கடந்த வாரம் இந்த வழக்கில் ஜோலார்ப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரித்துறை, வருவாய்க் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில், கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறி இருந்த அசையும் சொத்துகளின் மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் ரூ.14.30 கோடி வித்தியாசம் உள்ளது கண்டறியப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி, நேரடி வரிகள் வாரியம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் மனுத்தாக்கல் செய்ய தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
பின்னர் மனு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க கே.சி.வீரமணி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது, இதனால் வழக்கின் விசாரணை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, 2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்தது, போலியான பான் எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, கே.சி.வீரமணியின் மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
