பணிநிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

பணிநிரந்தரம் கோரி போராடி கைது செய்யப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பத்தாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத தி.மு.க. அரசால், சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, அதற்காகப் போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதோடு வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மூலம் வாக்குறுதியை அளித்த தி.மு.க. அரசு, ஆட்சி நிறைவடையும் தருவாயிலும் அவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும்.

எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. அளித்த பணிநிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.