காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று அண்ணாமலை கேட்டிருந்த நிலையில், காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார் என்று கேட்டு அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான முக. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க நாடாளுமன்ற திமுக லோக்சபா எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திமுக எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருப்பெரும்புதூர் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு மற்றும் சட்டப் பேரவை உறுப்பினரான நானும் முதல்வரைச் சந்தித்தோம். திருப்பெரும்புதூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக திருப்பெரும்புதூர் உள்ளது. அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதனை பரிசீலித்து ஊரகத்துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றார்.
தொடர்ந்து, காமராஜர் விவகாரம் குறித்த கேள்விக்கு, காமராஜர் விவகாரத்துக்கு நேற்று காலையே முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா. குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா என்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்து கேட்டதற்கு, ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம். அப்படி காங்கிரஸைப் பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை. பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார். அண்ணாமலையின் மூதாதையர், அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைவாதிகள் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து புதுதில்லியில் கொழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதனை செய்துவிட்டு தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம் போடுகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் வேஷத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார்.
