சிவசேனா போல் அதிமுகவை பாஜக உடைக்காமல் விடாது: அன்வர் ராஜா!

தமிழகத்தில் பாஜக என்பது எதிர்மறை சக்தியாகவே இருக்கிறது. பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போல் அதிமுகவை பாஜக உடைக்காமல் விடாது என முன்னாள் எம்பி அன்வர் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக அதிமுக நிர்வாகிகளுடன் எந்த சந்திப்பையும் நடத்தாமல் ஒதுங்கியே இருந்தாராம் அன்வர் ராஜா. இந்த நிலையில் இன்று காலை திடீரென அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். இவர் திமுகவில் இணைய போவது, எடப்பாடி பழனிசாமிக்கு கூட முன்கூட்டியே தெரியாதாம். ஊடகங்களில் வந்த செய்திகள் மூலமே அவருக்கு தெரியவந்ததாம். இதையடுத்துதான் அவசர அவசரமாக அன்வர் ராஜாவை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாராம்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்பு திமுகவில் அன்வர் ராஜா இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதையடுத்து அன்வர் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

அதிமுக தன்னுடைய கொள்கையில் இருந்து தடம்புரண்டு பாஜகவின் கையில் சிக்கியிருக்கிறது. பாஜக எந்த கட்சியுடன் சேர்ந்தாலும் அதை அழிப்பது தான் நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணமாக உள்ளது.

ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்; அக்கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். பாஜகவின் கையில் அதிமுக சிக்கியுள்ளது. அண்ணாவின் கொள்கைக்கு எதிரான பாதையில் அதிமுக பயணிக்கிறது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போல் அதிமுகவை உடைப்பதே பாஜகவின் எண்ணம்.

அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைந்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் ஆகிவிடுவார். 3 முறை பேட்டி அளித்த அமித்ஷா ஒரு இடத்தில் கூட முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கூறவில்லை. நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைப் போல நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று 10 நாட்களாக கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் பாஜக என்பது ஒரு நெகட்டிவ் ஃபோர்ஸ். தமிழக மக்கள் ஒரு போதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள். திமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அளவுக்கு நல்ல தலைவர் யாரும் அதிமுகவில் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என நான் நிறைய கூறினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.