தொடக்கப்பள்ளியில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வேல்முருகன்!

தொடக்கப்பள்ளியில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களை, 2024ஆம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 2013, 2017, 2019ஆம் ஆண்டு வரை நான்கு முறை டிஆர்பி தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மேலும், 21.07.2024 அன்று, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், புதியதாக தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு எழுதிய 25,176 பேரில், 23,972 ஆசிரியர்கள் நியமனத் தேர்வில் பெற்றுள்ளனர்.

மேலும், 2024இல் டிஆர்பி அறிவித்த எஸ்ஜிடி காலிப்பணியிடங்கள் வெறும் 2,768 மட்டுமே. 13 ஆண்டுகளில் 4 ஆசிரியர் தகுதித் தேர்வும், 1 தமிழ் தகுதித் தேர்வும், 1 நியமனத் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்ற 23,972 ஆசிரியர்களுக்கு, டிஆர்பி அறிவித்த 2,768 காலிப்பணியிடங்கள் என்பது மிகவும் சொற்பமானது.

அதுமட்டுமின்றி, டிஆர்பி தேர்வாணையம் அறிவித்த காலிப்பணியிடங்களானவை, 2021இல் 730 இடங்களும், 2022இல் 3,987 இடங்களும், 2023இல் 6,553 இடங்களும், 2024இல் 2,768 இடங்களும் என மொத்தம் 14,038 காலிப்பணியிடங்கள் உள்ளது. ஆனால் இதுவரை தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு, அந்த காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 110 விதியின் கீழ் அறிவித்த 19,260இல், தொடக்கப்பள்ளிக்கான காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.

கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண் 177இல் தெரிவித்த சுமார் 15000 காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது.

கடந்த 2025 மே மாதம் வரை, தொடக்கப்பள்ளிகளில் சுமார் 20000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பாததால், 2013 முதல் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தற்போது 40 முதல் 50 வயது கடந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலும், உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பல்வேறு சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர்.

எனவே, தொடக்கப்பள்ளியில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களை, 2024ஆம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.