ஆதவ் அர்ஜூனா கஷ்ட்பட்டு, கலப்பை பிடித்து சம்பாதித்தாரா?: சேகர்பாபு!

திமுகவின் ஊழல் காரணமாக பாஜகவை திமுகவினரே வளர்ப்பதாக ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். இதற்கு ஆதவ் அர்ஜூனா மிகவும் கஷ்டப்பட்டு கலப்பை பிடித்து ஏறு உழுது விவசாயம் பார்த்து சம்பாதித்தாரா என்று ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகிவிட்டன. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை மீட்போம். மக்களை காப்போம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக கூட்டணி கடந்த 8 ஆண்டுகளில் 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 இடைத்தேர்தல்களை சந்தித்துவிட்டது. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியுடன் களம் காண தயாராகியுள்ளனர். மறுபக்கம் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.

தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. நாம் தமிழர், தவெக கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்தவரை, 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். அதேநேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். ஒருபக்கம் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளவுள்ள விஜய் தலைமையிலான தவெகவினரும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தவெக, நாம் தமிழர் கட்சினரை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, திமுகவின் ஊழல் காரணமாக பாஜகவை திமுகவினரே வளர்ப்பதாக திமுக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். இதற்கு ஆதவ் அர்ஜூனா மிகவும் கஷ்டப்பட்டு கலப்பை பிடித்து ஏறு உழுது விவசாயம் பார்த்து சம்பாதித்தார என்று ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் முதல்வர் விஜய் தலைமையில் 2026 இல் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்ற தவெகவினர் கருத்து குறித்த கேள்விக்கு, நிற்பதற்கு கூட வலுவில்லாத இயக்கங்களுடன் நாங்கள் ஆட்சியமைப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். களம் வரட்டும். இந்த களம் எங்களுக்கானது. நிச்சயமாக மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பதை எந்த வகையிலும் யாராலும் தடுக்க முடியாது. அதைத் தடுக்கும் சக்தி தமிழகத்தில் இதுவரை உருவாகவில்லை. இனிமேலும் உருவாகாது என்றார்.

எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, இன்னும் அவர் தலைமையில் ஒரு கூட்டணி அமையவில்லை. அரைகூவலிட்டு அனைவரையும் கூவி கூவி அழைப்பதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி பலவீனப்பட்டு போயிருப்பது தெரியவருகிறது என்றார்.

திமுகவின் ஊழல் காரணமாக பாஜகவை அவர்களே வளர்ப்பதாக ஆதவ் அர்ஜூனா கூறியது குறித்த கேள்விக்கு, ஆதவ் அர்ஜூனா ரொம்ப கஷ்டப்பட்டு, கலப்பை பிடித்து, ஏறு உழுது விவசாயம் பார்த்து சம்பாதித்தார என்று கேட்டு விமர்சித்தார்.