மகனை மத்திய அமைச்சர் ஆக்க பாஜகவுடன் வைகோ பேச்சுவார்த்தை: நாஞ்சில் சம்பத்!

மகனை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் வைகோ பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்து விட்டதாகவும், அவருக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என மதிமுகவிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில் வைகோ குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுகவினர் தென்காசி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழக அரசியலில் வைகோவை அவ்வளவு எளிதாக யாரும் புறந்தள்ளி விட முடியாது. அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கலைஞர் கருணாநிதியோடு திமுகவில் களம் கண்டவர். தொடர்ந்து வாரிசு அரசியலை காரணம் காட்டி திமுகவில் இருந்து விலகி அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார். அவரது இடது, வலது கரங்களாக நான்கில் சம்பத், மல்லை சத்யா போன்றோர் இருந்தனர். தொடர்ந்து குழப்பமான கூட்டணி முடிவுகளால் மதிமுக அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக பல்வேறு உட்கட்சி விவகாரங்களில் சிக்கித் தவிக்கிறது.

வைகோவுக்கு வயதாகிவிட்ட நிலையில் கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என அவரது மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்தார். ஆனால் அதுவே பெரிய பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. வாரிசு அரசியலை எதிர்த்து களம் கண்ட மதிமுகவில் மீண்டும் வாரிசு அரசியலா என போர்க்கொடி தூக்கினர் சில சீனியர்கள். அந்த வகையில் மலை சத்யா, துரை வைகோவுக்கு எதிராக திரும்பிய நிலையில் அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் வைகோ. மதிமுகவிலிருந்து வெளியேறியவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை பற்றி அவதூறு பரப்பும் நபர்களிடம் மலை சத்யா தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். தனக்கு துரோகி பட்டம் கொடுத்து ஒதுக்க பார்ப்பதாகவும், அதைவிட தனக்கு ஒரு பாட்டில் விஷத்தை வாங்கி கொடுத்து கொலை செய்து விடலாம் என மல்லை சத்யா கூறியிருந்தார்.

இந்த நிலையில் வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருந்த நாஞ்சில் சம்பத், வைகோ மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

வைகோ, துரை வைகோ தவிர மற்ற அனைவரும் என்னுடன் பேசுகின்றனர். பாஜகவிடம் மதிமுக விலை போய்விட்டது. துரை வைகோவை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் பேசி முடித்து விட்டார். துரை வைகோவுக்கு அதிகாரப் பசி ஆட்டி படைக்கிறது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அதில் திருச்சியில் போட்டியிட கட்சிக்காக உழைத்த பலர் காத்திருந்த நிலையில் வைகோ மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் மகன்தான் முக்கியம் என தொகுதியை மகனுக்கே கொடுத்துவிட்டார். மதிமுக தேய்ந்து விட்டது நெருப்பில் கூட படுக்கலாம் வைகோவுடன் இருக்க முடியாது என கட்சியினர் கூறிவிட்டனர். மதிமுக அஸ்தமனம் ஆகிவிட்டது.

மத்திய அமைச்சராக வேண்டுமென துரை வைகோ ஆசைப்பட்ட நிலையில் அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி, மதிமுகவுக்கு 12 சீட்டு என கூட்டணி பேரம் முடிந்து விட்டது. பத்தாயிரம் கோடி சொத்து இருக்கிறது. விரைவில் மதிமுகவுக்கு வைகோ முடிவுரை எழுதுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வைகோ குறித்தும், துரை வைகோ குறித்தும் அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி எஸ்பி இடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மதிமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான சுப்பையா புகார் அளித்திருக்கிறார். அதில், ” மதிமுகவில் 10 வருடங்களுக்கு முன்பு பொறுப்பில் இருந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் மூத்த அரசியல் கட்சி தலைவரான வைகோ மீதும், திருச்சி எம்பி துரை வைகோ மீதும் காழ்ப்புணர்ச்சியில் அவன் இவன் என ஒருமையில் பேசியுள்ளார். மேலும் பேச்சு சுதந்திரத்தையும் மீறி திட்டமிட்டு வன்மத்தோடு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கவும் கலகம் விளைவித்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர் மீதும், முன்னர் மதிமுகவில் பொறுப்பில் இருந்த வல்லம் பஷீர் என்பவரும் சாதி ரீதியாக வன்மத்தோடு வைகோ மீது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.