தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்த நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்து கூற கடந்த மாதம் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பேருந்து கட்டண உயர்வு என்ற தகவல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசை பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பேருந்து கட்டணம் உயர்வு என்று வதந்தி பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை தெரிவித்து இருக்கிறார். எனவே இப்போதும் அதனை உறுதிப்படுத்துகிறோம். ஏழை எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான சூழல் பலமுறை ஏற்பட்டபோதும் பேருந்து கட்டணத்தை ஏற்றக்கூடாது என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். இப்போதும் தெளிவாக சொல்கிறேன்.. அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணம் உயர்வு நிச்சயம் இருக்காது” என்று தெரிவித்தார்.
