நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா செய்திருப்பது குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்காகக் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கும் அனுப்பினார். மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் முடிவடைந்த நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெகதீப் தன்கர் இனி தனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஜெகதீப் தன்கரின் இந்த முடிவுக்குப் பின் என்ன காரணம் என்பது பல்வேறு தரப்பினரும் கேள்வியாக உள்ளது. மருத்துவக் காரணம் என்று குறிப்பிட்டாலும், பாஜக தலைமை சார்பாக எடுக்கப்பட்ட முடிவே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஜெகதீப் தன்கர் செயல்பட்டதால் பதவி விலகினாரா என்ற கேள்வி உள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்தை இரு அவைகளிலும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதனிடையே நேற்று நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் பற்றி விவாதிக்க ஜெகதீப் தன்கர் ஒப்புதல் அளித்ததாகத் தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெகதீப் தன்கரின் ராஜினாமா முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இதுவரை பாஜக தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் வெளியாகிப் பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை? பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
