அதிமுகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை எனவும், கூட்டணிக்கு வராதவர்களை அவதூறாக பேசி எடப்பாடி பழனிசாமி அநாகரிக அரசியல் செய்து வருவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி நகர்ந்து வருகின்றன. சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்துவது போன்ற முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனித்து தான் போட்டியிடும் என்று சீமான் சொல்லிவருகிறார். இதனால் தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் மேலும் பல கட்சிகளை இந்த கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
முக்கிய கட்சி ஒன்று அதிமுகவில் இணையப் போவதாக சூசகமாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தான் மக்கள் பயணத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, விசிக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்க தயாராக இருப்பதாக கூறினார். அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முத்தரசன் இது சிவப்பு கம்பளம் வரவேற்பு அல்ல. ரத்த கம்பளம் வரவேற்பு என்று பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்து இருந்தனர்.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என்றும், கூட்டணிக்கு வராதவர்களை அவதூறாக பேசி எடப்பாடி பழனிசாமி அநாகரிக அரசியல் செய்து வருவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி வேறு வழி இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை. பாஜக எடப்பாடி பழனிசாமியை மிரட்டி கூட்டணி அமைத்து இருக்கிறது. இதுதான் எதார்த்தமான உண்மை. எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சியினருக்கும் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் கூட்டணிக்கு வரவில்லை என்பதால் அவர்களை அவதூறாகவும், கொச்சைப்படுத்தியும் பேசுகிறார். இது ஒரு நாகரீகமான தலைவருக்கு அழகல்ல..
தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்றால் மதவாத சக்திகளை அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.. இதை புரிந்து கொண்டவர்கள் ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.. புரியாதவர்கள் மாட்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
