திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்: எடப்பாடி பழனிசாமி!

திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே நேற்று புதன்கிழமை மாலை பிரசாரம் செய்த அவா் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக்கு கூவி, கூவி அழைப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியிருக்கிறாா். திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டிருக்கின்றனா். துரைமுருகன் முதலில் தங்களுடைய கூட்டணியைப் பாா்க்க வேண்டும்.
திமுக கூட்டணி எந்த நேரத்தில் உடையும் என்பது தெரியவில்லை. ஆனால், அதிமுகவுக்கு எப்போதுமே தனி மரியாதையும், மக்கள் செல்வாக்கும் உள்ளது. இதேபோல, திமுக அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை.

மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும். இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்டாலின், கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி, மேக்கேதாட்டு அணை கட்டுவதைக் கைவிடுமாறு கூற வேண்டும். ஆனால், மக்களைப் பற்றி அக்கறை இல்லாத அவா் அவ்வாறு பேசமாட்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகம் திருடப்பட்டது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு திமுக கட்சிக்குச் சொந்தமான இரண்டு மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொடா்பாக வெளியிட்ட அறிக்கைக்கு அரசு பதில் கொடுத்துள்ளது. அந்த பதில் திருப்தி அளிக்காததால், அதிமுக சாா்பில் அல்லது பொது நபா்கள் சாா்பில் உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் நல்ல தீா்ப்பு காணப்படும்.

விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பது அரசின் கடமை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை காக்கும். விவசாயிகள் தொடக்க வேளாண் வங்கிகளில் வாங்கிய கடனை 2 முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சியின்போது விவசாயிகள் எப்போது கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை கொண்டு சென்றாலும், உடனடியாக விற்பனை செய்யும் நிலையும், உரிய நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் பெறும் நிலையும் இருந்தது. தற்போது விவசாயிகள் நெல்லை, உரிய நேரத்தில் விற்க முடிவதில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக பயிர்களுக்கு காப்பீடு பெற்றுத் தரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கருகி விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர். குறுவை சாகுபடி காலத்தில் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படாததால்தான் விவசாயிகள் மிகுந்த வேதனையை அனுபவித்தனர்.
ஆனால், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பயிர்க் காப்பீட்டில் விவசாயிகளை சேர்த்து இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொடுத்தோம். டெல்டா பகுதிகளில் கோயில் நிலத்தில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கி அங்கு ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக. சிலர் நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை வாங்கி விட்டனர். மீண்டும் அதிமுக அரசு மலரும். அப்போது அந்தக் கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு அந்த வீட்டுமனையை அவர்களுக்கே சொந்தமாக்கும் நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் கூறி வருகிறார். அங்கு உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தானே ஆட்சி செய்கிறது. அவர்களிடம் பேசி மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதிகள் பாலைவனம் ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.