திமுகவுக்கு எதிராக ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக பிரச்சாரம் தொடக்கம்!

திமுக ஆட்சியின் ‘உருட்டுகளும், திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஜூலை 24) பிரச்சாரம் மேற்கொண்டார்.
புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் திருமயம் ஆகிய தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘உருட்டுகளும், திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சியில், நீட் தேர்வு விலக்கு, மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ரூ.100 காஸ் மானியம், சொத்து வரி உயர்த்தப்படாது, மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் திட்டம், 5.5 லட்சம் வேலை வாய்ப்புகள், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை, படிப்படியாக மது விலக்கு அமல்படுத்துதல், மாணவர்களுக்கு 4 ஜி, 5 ஜி இணைய வசதி மற்றும் 10 ஜிபி டேட்டாவுடன் கூடிய டேப்லட் ஆகிய 10 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ‘துரோக மாடல் உருட்டுகள்’ என்ற பெயரில் பட்டியலிட்டு, கேள்விக்கு ஒன்று வீதம் 10 கேள்விக்கும் எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம் என குறிப்பிட்டு துண்டறிக்கை அச்சிட்டு, பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட உள்ளனர்.

மதிப்பெண் அளிப்பவரின் செல்போன் எண்ணுடன் முகவரியையும் பெறுவது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். மேலும், வாக்குறுதிகளை சக்கரமாக வைத்து சுழற்றச் செய்தும், ஸ்கிராட்ச் கார்டு வடிவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், தமிழகத்தில் பாலியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தனித்தனி வீடியோ திரையிடபட்டது. இவற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் கலந்துகொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

என்னுடைய எழுச்சி சுற்றுப்பயணம் மூலம் 46 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். சுற்றுப்பயணித்தில் மக்களின் உற்சாகம், ஆரவாரம் பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் எதுவும் தெரியவில்லை. அதுப்பற்றி தெரிந்தவுடன் தான் சந்திப்பு பற்றி தெரியும். வியூகங்களுக்கு பதில் இல்லை பெரிய கட்சி வரும்போது சொல்கிறேன். வியூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. அவர்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். நேர்மையான காவல்துறை அதிகாரியை பழிவாங்குவது சரியல்ல. தவறுதலாக பேசி அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறார்கள். முதலமைச்சரும், உதயநிதியும் பிரதமரின் கதவை தட்டினார்கள் தானே. அவர்கள் தட்டினால் சரி. அதுவே நான் உள்துறை அமைச்சரை சந்தித்தால் தவறா. அவர் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே. அதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் பிரச்சனை அதிமுக – பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது. கட்சியில் சிலவற்றை மட்டுமே வெளிப்படையாக சொல்ல முடியும். எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. திமுக அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சனை பற்றி எதுவுமே தெரிவதில்லை. அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தால் அந்தப் பணிகள் தடைபட்டன. திமுக ஆட்சியில் கடந்த 4 வருடங்களாக ஏன் அந்த திட்டத்தை வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களை, அரசியல் காரணத்துக்காக கிடப்பில் போடுகிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முதியவர்களை குறி வைத்து கொலை செய்வது அதிகமாகியுள்ளது. அரசு குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் தவறு செய்வோருக்கு பயம் ஏற்படும். இல்லாவிடின் குற்றங்களை தடுக்க முடியாது. பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் பிரச்சனைகளை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்கிறோம்.

திமுக எம்எல்ஏ சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தான் சட்டவிரோத கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது சாதாரண சம்பவம் இல்லை. உடல் உறுப்பை சட்டவிரோதமாக எடுப்பதை திருட்டு என்று தான் கூற முடியும். நான் பத்திரிகை, ஊடகங்களில் வரும் செய்தியை மேற்கோள் காட்டி தான் பேசுகிறேன். முதலமைச்சரும், அமைச்சர்களும் அதைத் தவறான தகவல் என்கிறார்கள். நாட்டில் நிலவும் பிரச்சனைகளை எடுத்து சொல்வது தான் எதிர்க்கட்சிகளின் கடமை. அதை சரி செய்வது அரசின் கடமை. அரசு அந்த கடமையை தட்டி கழிக்கிறது. இதற்கு மக்கள் உரிய பதில் கொடுப்பார்கள்.

அதிமுகவில் எப்போதோ உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. திமுக அனைத்து செல்வாக்குகளையும் இழந்துவிட்டதால் வீட்டுக்கு சென்று ஓடிபி வாங்கி கொண்டிருக்கிறது. நாங்கள் மக்களிடம் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை கொடுத்து, அதற்கு மார்க் அடிப்படையில் டிக் செய்து கொடுக்கலாம். விருப்பம் இல்லாவிடின் அவர்கள் விட்டுவிடலாம். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கீழ் தரமாக பேசினார்கள். நான் எந்த இடத்திலும் மரியாதை தவறி ஒருமையில் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.