அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார். இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார்.
எனினும் திட்டமிட்டபடி நடைபயணத்துக்கான ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற இலச்சினையையும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராமதாஸின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம் மேற்கொள்கிறேன். மக்களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்டுக்கு அனுப்பும். 10 உரிமைகளை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்து, ஆக்சன் என்றதும் முதல்வர் நடிக்கிறார். பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்தால் உரிமை கிடைக்குமா. அது டாஸ்மாக்குக்குச் செல்கிறது. வேளாண் துறையில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீதமாக இருப்பது வெட்கக்கேடானது. சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சமூக நீதியை உருவாக்குவோம். இவ்வாறு பேசினார்.
இந்நிலையில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்தார். ‘நான்தான் பா.ம.க. நிறுவனர். எனது அனுமதி இல்லாமல் பா.ம.க. கொடியை யாரும் பயன்படுத்த கூடாது. அன்புமணி நடைபயணம் பா.ம.க.வில் மேலும் குழப்பத்தை உண்டாகும்.சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். எனவே அவருடைய இந்த பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்க கூடாது. தடை விதிக்க வேண்டும்’ என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
