தவெகவினருக்கு கட்சித் தலைமைக்கழகம் முக்கிய உத்தரவு!

தவெக கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தவெகவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முதல், நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் வரை அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தங்கள் கழகப் பணிகளின் போது, கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலம். கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டிய வேளை. கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகக் கழகத் தோழர்கள் ஒருபோதும் செயல்படக் கூடாது.

தேர்தல் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளுக்காக வீடு வீடாகச் செல்லும் போது, தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ஸ்டிக்கர் மட்டுமே ஒட்ட வேண்டும். அவற்றையே சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரப்புரைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

தலைமைக் கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படாத, அனுமதிக்கப்படாத வேறு வாசகங்களையோ புகைப்படத்தையோ, ஸ்டிக்கராகவோ, வேறு வடிவங்களிலோ கழக நிகழ்ச்சிகளுக்காக, பரப்புரைக்காக அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது.

தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, தனிப்பட்ட விதத்திலும் தலைமைக் கழகத்தால் பிரத்தியேகமாகத் தேர்தல் பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.

தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலச்சினைகள், வாசகங்களோடு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கட்சித் தலைவர் சார்ந்த வாசகங்கள் மற்றும் படங்களைத் தவிர்த்து வேறு வாசகங்களையோ, புகைப்படங்களையோ கட்சி நிகழ்ச்சிகள் சார்ந்தோ, தேர்தல் பரப்புரை சார்ந்தோ பயன்படுத்தக் கூடாது.

மேலும் பரப்புரை தொடர்பான அனைத்திலும் கட்டுப்பாட்டுடன் இந்த நடைமுறையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்சியின் அனைத்து நிலை அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்படும் உள்ளரங்கு மற்றும் பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின் போது, கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.