கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைப் பார்வையிட்டார் மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் மாளிகையில் உள்ள சிலைகள், சிற்ப வேலைபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெருமைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் போர் புரிந்த இடங்கள், அவர்களின் எல்லை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார்.

சோழர் கால செப்பேடுகள், உலோலாத்தில் வடிக்கப்பட்ட சிலைகள், கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டு அவை குறித்து அறிந்துகொண்டார். தொடர்ந்து, கோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.

முன்னதாக திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள பொன்னேரியில் பிரதமர் மோடி வந்திறங்கினார். அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் வந்திறங்கிய பொன்னேரியில் இருந்து சாலை மார்க்கமாக கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் புறப்பட்டார்.

இரு வழிகளிலும் பாஜக, அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சிக் கொடியுடன் குவிந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஆடி திருவாதிரை நிகழ்ச்சியையொட்டி அரியலூருக்கு வருகைபுரிந்துள்ள மோடி, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். பெருவுடையாருக்கு கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யவுள்ளார்.

பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா். பிறகு மத்திய கலாசாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.