தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடன் ஓபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக vs தவெக என்ற 2 முனை போட்டி தான் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. நேற்று இரவு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக பிரமுகர்கள் சந்தித்தனர். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில், “எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை – போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்” என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஓபிஎஸ் கடிதம் எழுதியும் பிரதமர் மோடி அவரை சந்திக்காமல் தவிர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போதும் பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் ஓபிஎஸ். இப்போது பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஓபிஎஸ்ஸை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ், தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என வெளிப்படையாகவே பேசியுள்ளார். மேலும், தவெக உடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடன் ஓபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி வைத்தால், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “2026 சட்டசபை தேர்தல் ஃபைனலில் பாஸ் செய்வது திமுக கூட்டணியும், விஜய் கூட்டணியும் தான். அதில் அதிமுகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடமே இல்லை. பாதியிலேயே போய்விடும். தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நிச்சயம் வடிகட்டி விடுவார்கள். திமுக vs தவெக என்ற 2 முனை போட்டி தான்” என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு ஆபத்தான கூட்டணி. பா.ஜ.கவை வளர்க்கக்கூடிய எந்தக் கூட்டணியுன் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காது. ஓபிஎஸ்-க்கு நன்மை இல்லை.. வெளியே வந்துவிட்டால் நிம்மதி. தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். ஓபிஎஸ்ஸை பாஜக புறக்கணிக்கிறது, அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “விஜய்யின் அரசியல் இன்று வரை நன்றாக தான் போய் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவருக்கு எங்களின் தார்மீக ஆதரவு உண்டு” என தெரிவித்திருந்தார்.
