கொடுங்கோல் திமுக ஆட்சிக்கு மணி அடிச்சாச்சு: அன்புமணி!

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போட்ட கொடுங்கோல் ஆட்சிதான், இந்த திமுக ஆட்சி எனவும், “அம்மன்” உத்தரவு கொடுத்து விட்டார், திமுக ஆட்சிக்கு மணி அடிக்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

“தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம்” என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உள்ளார். திருப்போரூரில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கியவர் இரண்டாவது நாள் நடை பயணத்தை செங்கல்பட்டில் மேற்கொண்டார். மாலையில் செங்கல்பட்டில் நடை பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் மேற்கொண்டார். உத்திரமேரூர் அம்பேத்கர் சிலையில் தொடங்கி, உத்திரமேரூர் பேருந்து நிலையம் வரை பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் பேருந்து நிலையம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அன்புமணி கூறியதாவது:-

உத்திரமேரூரில் முடிவாகிவிட்டது, திமுக ஆட்சிக்கு மணி அடிக்கப்பட்டுவிட்டது. கோவிலில் சாமி பாட்டு வந்தபோது, அதை மேற்கோள் காட்டி ‘அம்மன்’ உத்தரவு கொடுத்து விட்டார்கள் என அன்புமணி ராமதாஸ் கோவிலில் மணி அடிக்கும்போது பேசியது, கூட்டத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மேலும், 69% இட ஒதுக்கீடு ஆபத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு காக்க வேண்டும் என்றால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிடவேண்டும் என தெரிவித்தார்.

மேல்மா சிப்காட் அமைக்க போவதாக கூறுகிறார்கள். 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு இருக்கும் விவசாயிகளை விரட்டியடித்து, சிப்காட் அமைக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். விவசாய நிலங்களை ஏன் பிடுங்குகிறார்கள் என தட்டி கேட்டால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுகிறார்கள். விவசாயிகள் நமக்கு சோறு போடுகிறவர்கள், அப்படிப்பட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட கொடுங்கோல் ஆட்சி என குற்றச்சாட்டை முன்வைத்தார். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடும் உங்களுக்கு, எவ்வளவு திமிரு, எவ்வளவு தனாவட்டு இருந்தால், அவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டிருப்பீர்கள். நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 7000 கொலைகள் நடைபெற்று உள்ளது அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கான அடிப்படை சேவைகளை செய்து கொடுக்காமல் இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி படி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி இருந்தால் இந்த சேவைகள் 15 நாட்களில் மக்களின் வீடு தேடி வந்திருக்கும். சேவைகளை கேட்பது மக்களின் உரிமை அதனை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.. ஆனால் திமுக அரசு இதனை செய்து கொடுக்க மறுக்கிறது ஏனென்றால் இவற்றையெல்லாம் செய்து கொடுத்துவிட்டால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களில் உள்ள சேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க கூட லஞ்சம் கேட்கிறார்கள். ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுத்துவிட்டால் பெண்களுக்கான உரிமை கிடைத்து விடுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பிய அன்புமணி, பெரியார் அண்ணா கலைஞரின் வாரிசு என்று பேசுவார்கள் ஆனால் சமூக நீதி ஒரு கிலோ விலை எவ்வளவு என்று கேட்பார்கள்.. திமுக சமூகநீதிக்கு துரோகம் செய்துவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை சுற்றி அமைச்சர்கள் இல்லை அவர்கள் வியாபாரிகள்” என்றார்.