பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மற்றும் அவர்களது மகன் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறு முகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் செல்வகணேஷ், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் வந்திருந்தார்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கவின் செல்வ கணேஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் கவின் செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி, கேடிசி நகரைச் சேர்ந்த சுர்ஜித் என்பவரை பிடித்து விசாரித்தனர். பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. கேடிசி நகரைச் சேர்ந்த சரவணன், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மணிமுத்தாறு ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்களது மகன்தான் சுர்ஜித். ஒரு மகளும் இவர்களுக்கு உள்ளார். சரவணனின் மகளும், கவின் செல்வகணேஷும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சரவணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பின்னணியில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுர்ஜித்தை போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, சுர்ஜித் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது சகோதரியுடன் பழகுவதை நிறுத்துமாறு எச்சரித்தும், கவின் செல்வகணேஷ் அதை பொருட்படுத்தவில்லை. இதனால், அவரை கொலை செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘கவின் செல்வ கணேஷை கொலை செய்த இளைஞரின் பெற்றோர்களான சப்-இன்ஸ் பெக்டர்களை கைது செய்ய வேண்டும்’ எனக் கூறி உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள முக்காணியில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாநகர உதவி காவல் ஆணையர் சுரேஷ், தூத்துக்குடி ஏடிஎஸ்பிகள் திபு, சகாய ஜோஸ், ஏஎஸ்பி மதன் ஆகியோர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ‘சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.
ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர் கவின் 25 வயது நிரம்பிய இவர் ஒரு இன்ஜினியர். இவரது தந்தை சந்திரசேகரன், தாய் செல்வி ஆசிரியை. கவினின் பள்ளித் தோழியான ஒருவர் சித்தா மருத்துவம் முடித்து, நெல்லை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்கள் எனத் தெரிகிறது. தன்னுடைய அக்கா தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவுடன் பழகுவதை விரும்பாத சகோதரன் சுஜித் என்பவன், சூசகமாகப் பேசி, கவினை நெல்லை KTC நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பட்டப்பகலில் கூலிப்படை துணையுடன் கொலை செய்துள்ளான். சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் மணிமுத்தாறு காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகின்றனர்.
கவினும் இந்தப் பெண்ணும் நேசிக்கிறார்களா? வெறும் பழக்க வழக்கமா? என்பது கூட உறுதி செய்யப்படாத நிலையில் சாதி வெறியோடு கவின் என்ற தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கக் கூடியது. உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் உள்ள சாதிவெறி என்ற தீராத வியாதிக்கு உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளதாவது:-
நெல்லை – KTC நகர் பகுதியில், அஷ்ட லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் கவின் என்ற இளைஞரை மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர் கவின் தூத்துக்குடி – ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் என்றும் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் ஆணவ கொலை என்று சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் சாதிய ஆணவ படுகொலைகள் அதுவும் பட்டப்பகலில் அரங்கேறுகிறது என்ற அச்சம் பொதுமக்களிடம் தோன்றுகிறது.
கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கவின் என்ற இளைஞரை பட்டப்பகலில் மர்ம கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் யார்,யார் பின்னணியில் இருக்கிறார்கள். யாரின் தூண்டுதலில் பெயரில் நடந்திருக்கிறது என்பதனை காவல்துறை உரிய விசாரணை செய்து, குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
