ஜூலை 31 நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

நெல்லை கவின் படுகொலையைக் கண்டித்து ஜூலை 31 அன்று நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த திரு. சந்திரசேகர் மற்றும் திருமதி. தமிழ்ச்செல்வி ஆகியோரின் புதல்வனான கவின் (22), சென்னை டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு கணினி பொறியாளர். பள்ளிப் பருவம் தொட்டு தற்போது சித்த மருத்துவராக உள்ள சுபாஷினியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் பழகி வந்ததை ஏற்றுக்கொள்ள இயலாமல், (ஜூலை 27, 2025) கவினைத் தந்திரமாக தனது வீட்டிற்கு வரவழைத்து சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் என்பவனால், கவின் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், ஒரு மாணவனைப் பொறியாளராகப் படிக்க வைத்து, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் அளவிற்கு உயர்த்துவது எவ்வளவு கடினமானது என்பதை நாடறியும். மேலும், கவினின் தந்தை, தாய் மற்றும் அவரது குடும்பப் பின்னணியும், சுர்ஜித் குடும்பப் பின்னணிக்கு சிறிதும் குறைந்ததல்ல. மேலாதிக்க சாதித் திமிரைத் தவிர, அவர்களிடத்தில் வேறு பெரியது எதுவும் இல்லை.

பள்ளிப் பருவம் முதல் ஏறத்தாழ பத்து வருடங்களாகக் கவினும், சுபாஷினியும் பழகி வந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளான சுபாஷினியின் பெற்றோர்களுக்கு இது தெரியாமலா இருந்திருக்கும்? திடீரென்று அவர்களுக்குக் ‘கௌரவம்’ எங்கிருந்து எப்படி முளைத்தது? கவினைத் திட்டமிட்டு சுபாஷினி வீட்டிற்கு வரவழைத்ததும், உடனே அவரது தம்பிக்கு தகவல் கொடுத்ததும், சுபாஷினியின் ஒட்டுமொத்த குடும்பத்தாரும் திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்துள்ளனர் எனத் தெளிவாகிறது.

உடுமலை சங்கர் படுகொலை, நாங்குநேரி தீபக் படுகொலை போன்ற சம்பவங்களிலும், இதுபோன்றே பெண்ணின் சகோதரர்கள், மாமா, தாத்தா, பாட்டி, உற்றார் உறவினர் மூலம் கொலையுண்டவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்றி கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று கவின் கொலையிலும் சுபாஷினி உட்பட அவரது குடும்பத்தார் அனைவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இது வெளிப்படையாகவே சாதி, குடும்ப கௌரவம் பார்த்து அரங்கேற்றப்பட்ட படுகொலையாகும். காவல்துறை தனது விசாரணையை விரிவுபடுத்தி, சம்பந்தப்பட்ட சுபாஷினி உட்பட அவரது பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம், ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கைப் போன்று விரைந்து நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நெல்லை கவினின் இக்கொடூரப் படுகொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், வரும் ஜூலை 31ஆம் தேதி (வியாழக்கிழமை) திருநெல்வேலி ரயில் சந்திப்பில் காலை 11.30 மணிக்கு புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணித் தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி MS அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.