பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் எஸ். சீனிவாசன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்துடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் இருந்து வந்தார். இந்த நிலையில் தான், பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தொழில் அதிபரிடம் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1,000 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.5 கோடி கடன் பெற்றுள்ளார். 5 கோடி பணத்தை பெற்றுக்கொண்ட பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் எதுவும் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்போதே கைது செய்யப்பட்ட சீனிவாசன், இந்த வழக்கு தொடர்பாக பீகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் பல மோசடி வழக்குகள் பதியப்பட்டது. பல்வேறு இடங்களில் இதேபோன்று இவர் மோசடியில் ஈடுபட்டதாக பல வழக்குகள் பதிவானது. குறிப்பாக சென்னையில் கூட 6 வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல மாநிலங்களில் கடன் பெற்று தருவதாக கூறி காசோலை வழங்கி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்குகளையும் பவர்ஸ்டார் சீனிவாசன் சந்தித்து வந்துள்ளார். இதில் டெல்லி தொழில் அதிபரை மோசடி செய்த வழக்கும் டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றவாளி என்று அறிவித்த பிறகும் சீனிவாசன் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
