ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.. ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி வலியுறுத்தியிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான கவின், கடந்த ஜூலை 27ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை கொலை செய்ததாக சுர்ஜித் என்ற இளைஞர் பாளையங்கோட்டை போலீசில் சரணடைந்தார். சரணடைந்த சுர்ஜித், கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் என்பதும், கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதால் அவரை சுர்ஜித் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதான சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது எப்ஐஆர் பதிவாகியிருக்கிறது.. சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோல்ட் மெடலிஸ்ட்டான ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. கவினும், அந்த பெண்ணும் இருக்கும் போட்டோக்களை, அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்..
நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி முன்னிலையில், இரவு 8 மணி வரை கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள சுர்ஜித் பெற்றோர் இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துவிட்டனர். தற்போது கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சனாதனத்தின் கோர முகமான ஜாதியின் கொடிய விளைவுகளில் ஒரு துளி தான் ஆணவப் படுகொலைகள். ஜாதியின் பெயரால் நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்த்த பின்னும், சட்ட ரீதியாக இன்னும் ஜாதி ஏற்கப்படுகிறதே, அது மதம் என்னும் பாதுகாப்புக்குள் இன்னமும் பதுங்கிக் கொண்டிருக்கிறதே, இது அறிவார்ந்த ஜனநாயக சமூக சமூகத்தால் ஏற்கத்தக்கதா? கோல்ட் மெடலிஸ்ட் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (2), 25 (1), 26, 29 (1), (2), 368 ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டி, அதனைக் கொளுத்தும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்ததன் அடிப்படையில், 10000 பேர் கொளுத்திச் சிறை சென்றார்களே, அது ஜாதி ஒழிப்புக்காகத் தானே!
ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று 68 ஆண்டுகளுக்கு முன் 1957-இல் கேட்ட தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே! இந்த நவீன யுகத்திலும், ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா? பொறியாளர் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். படித்து, காவல்துறை பணியில் இருக்கும் குடும்பம் இத்தகைய கொலைக்குப் பின்னால் இருக்கிறது; இளைஞர் ஒருவர் ஆணவக் கொலையைச் செய்திருக்கிறார் என்றால் ஜாதிய நஞ்சு எப்படி மூளையில் ஏறியிருக்கிறது, சிந்தனையை எப்படி மழுங்கடித்திருக்கிறது என்பது ஆழ்ந்த கவலையோடும், கவனத்தோடும், தீவிரத்தோடும் அணுக வேண்டிய ஒன்றாகும்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா முழுக்க இந்தச் சட்டம் அவசியமாகிறது. சட்டம் வந்தாலும், அதனை முழுமையாக, சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் கொடுமைகள் நடந்தபின் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மட்டுமல்ல; வரும் முன் காப்பதற்கான ஏற்பாடுகளுக்கும் சட்டத்தில் இடம் வேண்டும். ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவின் செல்வகணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய கொடூரங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் இன்னும் முனைப்புடன் ஈடுபடுவதே நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
