நாங்கள் குலதெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவை விமர்சித்து எந்தக் கருத்தையும் நான் கூறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் போது ஏதாவது குழப்பத்தை விளைவிக்க வேண்டி தனது கருத்தை தவறாகத் திரித்துக் கூறுவதாகவும் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்திருந்தார். சுப்பிரமணிய சுவாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி வரலாற்றுப் பிழை செய்துவிட்டோம் என்று கூறிய அவர், ஜெயலலிதா செய்த பிழையால் திமுக 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா மட்டும் அந்த வரலாற்றுப் பிழையைச் செய்யாமல் இருந்திருந்தால், தற்போது திமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றும் கூறி இருந்தார்.
கடம்பூர் ராஜூவின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய கூட்டணியைக் காப்பதற்காக, அதிமுகவின் பெரும் தலைவரின் முடிவை விமர்சிப்பதா என்றும் அக்கட்சியினர் விமர்சித்து வந்தனர். தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், ஜெயலலிதாவை விமர்சித்த கடம்பூர் ராஜூவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவை எங்களின் குலதெய்வம் என்றும் கூறி இருக்கிறார். இதுகுறித்து கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
2026ல் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தான் முதல் கட்சியாகக் களத்திற்கு வந்துள்ளது. இந்த இயக்கத்தை உருவாக்கியது எம்ஜிஆர். அதேபோல் சாதாரண தொண்டராக இருந்த எங்களை ஆளாக்கி அழகுபார்த்து கோட்டைக்கு அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா. எங்களை வாழவைத்த தெய்வமாகத்தான் அவரைப் பார்க்கிறோம். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அப்படிதான் உணர்கிறான். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது எங்கள் பகுதிக்கும் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன் பணிகளை பாஜக தரப்பிலும் சிறப்பாக மேற்கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்க என்னையும் அழைத்தார்கள்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 1998ல் பாஜகவுடன் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கூட்டணி அமைத்தது. அந்த நேரத்தில் பாஜகவோடு கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகள் தயங்கியது. ஆனால் ஜெயலலிதா தைரியமாகக் கூட்டணி அமைத்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனால் இந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி மலர்ந்தது. இதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அதனைப் பயன்படுத்தி பாஜகவுடன் 1999ல் திமுக கூட்டணி அமைத்தது. மீண்டும் பாஜக ஆட்சி வந்தபின், வாஜ்பாய் அமைச்சரவையில் வளமான பதவியை பெற்றுக் கொண்டு கட்சியை வளமாக்கினார்கள். பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தால், அப்போது பாஜக நல்லக் கட்சி. ஆனால் அதிமுக பாஜகவோடு இணைந்தால் மட்டும், தீண்டக்கதாத கட்சியா என்ற கருத்தை மட்டும்தான் சொன்னேன்.
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தமிழ்நாடு முழுக்க பேசப்படுவதால், ஏதாவது குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எனது கருத்தைத் தவறாகத் திரித்துக் கூறுகின்றனர். எங்கள் குலதெய்வமாக, குடும்ப தெய்வமாக இருக்கும் ஜெயலலிதாவை விமர்சித்ததாக வெளியான கருத்து தவறானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
